டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணி சென்ற மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது.

​இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் பக்கம், அவர்களின் ஜனநாயக உரிமைக்காகவும், கல்வி முறை சீர்திருத்தத்திற்காகவும் நான் உறுதியாக நிற்கிறேன். பயமற்ற தலைமுறையை உருவாக்கி இருக்கும் ‘ஜென்சி’ (Gen Z) இளைஞர்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்!” எனத் தன் பதிவில் ஜோதிகா கொந்தளித்துள்ளார்.

​நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு காட்டும் மெத்தனப்போக்கையும், போராடும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளையும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் மாணவர்களுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து வருவதுடன், கல்வித்துறையில் உடனடியாகச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.