துபாயின் தேரா பகுதியில் ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் சுமார் 1,000 நகை வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான தங்க வளாகம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயை உலகளாவிய நகை வர்த்தகத்தின் முன்னணி மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், சில்லரை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்பான சூழலை வழங்குகிறது.
இதில் மலபார் கோல்டு மற்றும் ஜாய் ஆலுக்காஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் மிகப்பெரிய கிளைகளை அமைக்கின்றன. குறிப்பாக, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய சில்லரை விற்பனை நிலையத்தை இங்கு அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, உலகின் முதலாவது ‘தங்கத்திலான தெரு’ இங்கு அமைக்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தங்கம் விற்பனை செய்யும் இடமாக மட்டுமின்றி, வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனங்களும் இங்கு அமையவுள்ளன. துபாயின் கலாசாரம் மற்றும் செழிப்புடன் தங்கம் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான வளாகம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் வர்த்தகர்களையும் ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
