இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் இது குறித்துக் கூறுகையில், இந்தியாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குவதன் மூலம் ஐரோப்பா தனக்கு எதிரான போருக்கே நிதி அளித்துக் கொள்கிறது என்று சாடியுள்ளார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி இந்தியா அதனை சுத்திகரித்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும், மறைமுகமாக ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் பணம் உதவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பெரும் தியாகங்களைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட பெசன்ட், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார். சுமார் 18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதனை ‘அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்’ என்று வர்ணித்துள்ள நிலையில், அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையே இது புதிய கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளது.