லடாக்கின் எல்லைப் பகுதிக்கு பைக் பயணம் மேற்கொண்ட சில இளைஞர்களுக்கு, அங்குள்ள இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பைக் ரைடர்கள் லடாக் சாலையோரம் நின்று தங்கள் மொபைல் திரையைக் காட்டுகின்றனர்.
அதில், “நாங்கள் இந்தியாவில் தான் நிற்கிறோம், ஆனால் மொபைலில் சீனாவின் டைம் காட்டுகிறது” என்று ஒரு இளைஞர் கூறுகிறார். இந்தியாவில் காலை 9 மணி என்றிருக்க, மொபைலில் 2.30 மணி நேரம் கூடுதலாக, அதாவது சீனாவின் நேரப்படி 11.30 என்று காட்டியுள்ளது. லடாக்கின் சில பகுதிகள் இந்திய-சீன எல்லைக் கோட்டிற்கு (LAC) மிக அருகில் இருப்பதால், சீன மொபைல் கோபுரங்களின் சிக்னலை இவர்களது போன் தானாகவே கிரகித்துக் கொண்டதுதான் இதற்குத் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
अपने ही देश के लद्दाख में घूम रहे भारतीय बाइक राइडर का मोबाइल टाइम जोन ऑटोमैटिक चीन के टाइम में बदल जा रहा है।
क्या ये भी नेहरू की गलती है? pic.twitter.com/t8hYWiGi3H
— Einstein Yadav (@EinstYdv) June 17, 2026
ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘Automatic Time Zone’ மற்றும் ‘Automatic Network’ வசதிகள் காரணமாகவே அருகில் உள்ள சீன கோபுரத்தின் சிக்னல் கிடைத்து, சர்வதேச ரோமிங் மற்றும் நேர மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ ஏரி, டெப்சாங் சமவெளி, டெம்சோக், சுமார் மற்றும் சாங்தாங் போன்ற லடாக்கின் பகுதிகள் எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் உள்ளன.
சீனா தனது எல்லைப் பகுதிகளில் மொபைல் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை வேகமாக மேம்படுத்தி வருவதையே இது காட்டுகிறது என பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, லடாக்கின் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வோர், தங்களின் மொபைல் செட்டிங்ஸில் சென்று ‘Automatic Time Zone’ மற்றும் ‘Automatic Network Selection’ ஆகியவற்றை முடக்கிவிட்டு (Off), Jio, Airtel, BSNL போன்ற இந்திய நெட்வொர்க்குகளை மேனுவலாக (Manually) தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
