தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதற்காக கிண்டி மக்கள் மாளிகையிலிருந்து புறப்பட்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தலைமைச் செயலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் அவரை வரவேற்றனர். சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்துடன் தொடங்கிய கூட்டத்தில், ஆளுநர் அர்லேகர் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை ஆற்றினார்.
அப்போது, பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் சமவாய்ப்பு ஆகிய அடிப்படைக் கொள்கைகளுடன் இந்த அரசு செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், ‘விசில் புரட்சி’ மூலம் 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து இமயமலை அளவிற்கான வெற்றியை விஜய் பதிவு செய்துள்ளார் எனப் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் படை அமைக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசிடம் கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், தலைமைச் செயலாளர் தலைமையில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டு புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமை இரட்டிப்பாகி ரூ.10 லட்சம் கோடியைக் கடந்துள்ளதால், தனிநபர் கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது குறித்தும் ஆளுநர் தனது உரையில் கவலை தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் முல்லைப் பெரியாறு நீர்வரத்தை தடுக்கும் நோக்கில் கேரள அரசு கட்டம் புதிய அணைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மேகதாது அணை கட்டவும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் காவிரி நீரை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கிறது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே இதில் தமிழக வெற்றிக்கனக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
