தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் இன்று தொடங்கியது. முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே ஆளுநர் உரை தொடர்பாகத் தொடர் மோதல்கள் அரங்கேறின. கடந்த 2022-ல் தனது உரையை முழுமையாகப் படித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, 2023-ம் ஆண்டு உரையின்போது மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி உள்ளிட்ட முக்கியச் சொற்களைத் தவிர்த்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதால் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டு தொடக்கம் வரை நடந்த கூட்டங்களில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வெளியேறினார். இவ்வாறு 2023 முதல் 4 முறை அவர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆர்.என்.ரவி மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு இன்னும் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் தொடங்கிய த.வெ.க. அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசினார். கடந்த காலங்களில் நிலவிய உராய்வுகளுக்கு மாறாக, தற்போதைய கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் தனது உரையை எவ்விதத் தடையுமின்றி முழுமையாக வாசித்து முடித்தார். இதன் மூலம் த.வெ.க. அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் சுமுகமான முறையில் தொடங்கியுள்ளது. மேலும் கிட்ட தட்ட 39 நிமிடங்கள் வரை ஆளுநர் தன் உரையை படித்து நிறைவு செய்துள்ளார். அதோடு தமிழக அரசு எழுதிக் கொடுத்தவன் செய்யும் அவர் முழுமையாக எந்தவித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே பேசியதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது.