தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விவசாயிகளுக்கான முக்கிய சலுகை மற்றும் கனிமவளப் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 18,274 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதே வேளையில், கனிம வளக் கொள்ளையைத் தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், தற்போதைய அரசின் கீழ் அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு, இடைத்தரகர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கல்வி மற்றும் மொழிக்கொள்கை குறித்துப் பேசிய ஆளுநர், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் இருமொழிக் கொள்கையையே இந்த அரசும் தொடர்ந்து பின்பற்றும் என்று உறுதிபடத் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு மறுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், தற்போது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பின், மாநில அரசு சமூக நீதி கணக்கெடுப்பை (சாதி வாரி கணக்கெடுப்பு) மேற்கொள்ளும் என்றும் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
