அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஆலன் ஜோசப் மெக்கின்லி (Alan Joseph McKinley). மன அழுத்தத்தில் இருந்த இவர், கடந்த ஒரு வருடமாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மிகவும் குரூரமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் அவர்கள் வைத்திருக்கும் குளிர்பானப் பாட்டில்களில் தனது சிறுநீரைக் கலந்து விடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் தங்களுக்குத் தெரியாமலேயே அந்த அருவருப்பான பானத்தைக் குடித்து வந்துள்ளனர்.
இந்தக் கொடூரமான செயலின் உச்சக்கட்டமாக, ஒரு நாள் அந்த முதியவர் கொடுத்த பானத்தைக் குடித்த 9 வயது சிறுவனுக்குத் தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
வாந்தி, மயக்கம் எனச் சிறுவன் துடித்ததைத் தொடர்ந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவன் குடித்த பானத்தில் சிறுநீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த முதியவரின் விகாரமான புத்தி அம்பலமானது.
போலீசார் அவரைக் கைது செய்தபோது, “நான் மன அழுத்தத்தில் இருந்தேன், மற்றவர்களை இப்படி ஏமாற்றுவது எனக்கு ஒரு ஜாலியாக (Prank) இருந்தது” என்று கூலாகப் பதிலளித்துள்ளார். தற்போது அவர் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
