இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் புழக்கத்தில் உள்ள அனைத்து காகித ரூபாய் நோட்டுகளையும் செல்லாததாக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் வாரியமான ‘பிரஸ் இன்பர்மேஷன் பீரோ’ (PIB) அமைப்பின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) இது முற்றிலும் பொய்யான மற்றும் வதந்தியான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. காகித நோட்டுகளைத் திரும்பப் பெறும் திட்டமோ அல்லது பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டு வரும் எண்ணமோ தற்போதைக்கு ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்று பிஐபி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தப் போலி வீடியோவில் 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் காட்டப்படுவதுடன், பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டு மக்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்கப் பரப்பப்பட்டுள்ளது என்று பிஐபி கண்டறிந்துள்ளது. கள்ள நோட்டுகளைத் தடுக்கவும், நீண்ட காலம் உழைக்கவும் பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டு வரலாம் என்று ரிசர்வ் வங்கி முன்பு பரிசீலித்ததாகப் பரவிய பழைய தகவல்களைப் பயன்படுத்தி இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து காகித நோட்டுகளும் எப்போதும் போலச் செல்லுபடியாகும் என்றும், பணப் பரிவர்த்தனை தொடர்பான அரசு அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும், உண்மைத் தன்மையற்ற செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும் பிஐபி அறிவுறுத்தியுள்ளது.