மும்பை தாதர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி டெலிவரி ஊழியர் ஒருவர் பலியான சோகம் மறைவதற்குள், காந்திவிலி பகுதியில் மற்றொரு பயங்கர பேருந்து விபத்து அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 8-ஆம் தேதி காலை சுமார் 11:40 மணியளவில்மின்சாரப் பேருந்து ஒன்று சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பாதசாரிகள் மீது பின்னால் இருந்து அதிவேகமாக மோதியுள்ளது. இந்த விபத்து நடந்த உடனே பேருந்தின் நடத்துனர், காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள சதாப்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் சிக்கிய சோனம் மௌரியா (24), ஆதர்ஷ் ஹீரலால் யாதவ் (24) ஆகிய இரு இளைஞர்களில், சோனம் மௌரியா என்ற இளம் பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பேருந்து மோதிய வேகத்தில் தலையிலும் காலிலும் பலத்த காயமடைந்து சுயநினைவிழந்த அந்தப் பெண்ணுக்கு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொருவரான ஆதர்ஷிற்குத் தோள்பட்டை மற்றும் கண்ணின் அருகே லேசான காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரது நிலைமை சீராக உள்ளது. மும்பை மாநகரில் சமீபகாலமாகப் பொதுப் போக்குவரத்து பேருந்துகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது பேருந்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
मुंबईच्या कांदिवलीत पुन्हा अपघात, बेस्ट बसने दोघांना चिरडलं pic.twitter.com/3dVxV2CevN
— News18 Marathi (@News18_marathi) June 10, 2026
