மகாராஷ்டிராவில் குரு பூர்ணிமா விழாவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலேவின் கால்களை இரண்டு நபர்கள் கழுவிவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது ‘காங்கிரஸின் கலாச்சாரம்’ என பாஜக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்களே தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் மரியாதையின் நிமிதமாக இதனைச் செய்தனர் என்று நானா படோலே விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட குரு பூர்ணிமா விழாவின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர் நானா படோலே சோபாவில் அமர்ந்திருக்க, இரண்டு நபர்கள் அவரது கால்களைக் கழுவி, மீது மலர் தூவி, அருகில் பழங்களை வைத்து மரியாதை செலுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் நெட்டிசன்களும் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி மகாராஷ்டிரா வருவாய்த்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சந்திரசேகர் பாவன்குலே காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான கலாச்சாரம். இது போன்ற நிகழ்வுகளிலிருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. இறுதியில் விமர்சனங்களையும் எதிர்மறை விளம்பரங்களையும் மட்டுமே பெற்றுத் தரும் இதுபோன்ற சடங்குகளில் எதற்காக ஈடுபட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
Nagpur,Maharashtra – A controversial video of former Maharashtra Congress president Nana Patole has gone viral on social media, showing him washing feet with milk.The clip has triggered a wave of anger against Patole, with many criticising the act as contrary to the ideology of… pic.twitter.com/jyiCznhXdg
— NextMinute News (@nextminutenews7) August 2, 2026
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த நானா படோலே, தான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், அந்தச் சடங்கை செய்யச் சொல்லி தான் யாரிடமும் கூறவில்லை என்றும் தெரிவித்தார். “அன்று குரு பூர்ணிமா தினம். என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைய தலைமுறை உறுப்பினர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை தங்களின் குருவாக நினைத்து, மரியாதையின் நிமிதமாகத் தாங்களாகவே முன்வந்து இந்தச் சடங்கைச் செய்தனர். நான் யாரிடமும் இதைச் செய்யச் சொல்லிக் கேட்கவில்லை” என்று படோலே விளக்கமளித்தார்.
மேலும், பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்குக் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், “நன்கொடை நிதியைத் திருடுபவர்களுக்கு எங்களைப் பற்றி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை” என்று கடுமையாகச் சாடினார். அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியே அவர் இந்த எதிர்வினையாற்றினார்.
