நவி மும்பையின் நெருல் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், இந்து மதக் கடவுள்களின் சிலைகள் மற்றும் பூஜை அறையைச் செவிலியர் ஒருவர் திட்டமிட்டு அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் ஹர்ஷலா பாட்டீல் என்ற பெண், அங்குள்ள தனது அறையில் விநாயகர் மற்றும் ராதாகிருஷ்ணர் சிலைகளை வைத்துத் தொடர்ந்து வழிபாடு செய்து வந்துள்ளார்.

கடந்த மே மாத இறுதியில் இந்த விடுதிக்கு வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த கிறித்தவச் செவிலியர் ஒருவர், ஹர்ஷலாவின் பூஜை அறை குறித்துத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மத வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் அந்தச் செவிலியர், இந்து கடவுள்களின் சிலைகளையும் படங்களையும்  காலணிகள் வைக்கும் ஸ்டாண்டிற்கு அருகில் தூக்கி வீசியதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் அரங்கேறிய  செயல் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் உடனடியாக ‘இந்து சமிதி’ அமைப்பைத் தொடர்பு கொண்டு உதவி கோரினார். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக நெருல் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் அஜய் காம்பிளேயைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிட்டனர்.

சம்பவத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த போலீசார், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்தச் செவிலியர் மீது FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மத நல்லிணக்கத்தைக் கெடுக்க முயன்ற அந்தச் செவிலியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.