கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசத்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் வழியாக வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடு பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை பார்க்க வந்திருந்த ஒரு வாலிபரை முட்டி தள்ளியது. இதனால் படுகாயமடைந்த அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் இளநீர் வியாபாரியான மஞ்சுநாத்(26) என்பது தெரியவந்தது. மேலும் விழாவின் போது மாடு முட்டி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.