செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 21) என்பவர், தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, காரணை பகுதியிலிருந்து ஒட்டியம்பாக்கம் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், தன்னை பின்தொடர்ந்து வந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி நேரில் சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த, சம்பவ இடம் பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் வந்ததால், குற்றப்பத்திரிகையை அந்த காவல் நிலையத்திற்கு மாற்றி அனுப்பினர்.

பெரும்பாக்கம் போலீசார் விசாரணையில் இறங்கியதுடன், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு (CCTV) காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் எந்தவொரு நகை பறிப்பு சம்பவமும் நடந்ததாக சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், தமிழ்ச்செல்வியிடம் மீண்டும் விசாரணை நடத்தியபோது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தனது தங்க நகையை எங்கேயோ தொலைத்துவிட்டதாகவும், அது தெரிந்தால் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்படும் என்பதால், நகை பறிக்கப்பட்டது போல பொய் புகார் அளித்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்மீது பொய் புகார் கொடுத்ததற்கான சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் எச்சரிக்கை விடுத்து ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.