தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி மீனவ பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது, மகாபாரத காலத்தில் இருந்தே மீனவ சமுதாயம் இருக்கிறது. மீனவ சமுதாயம் மிகவும் பழமையான சமுதாயமாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

மீனவர்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தாகவும் கடினமாகவும் இருக்கிறது. தினமும் உயிரை பணயம் வைத்து உழைக்கிறார்கள். மீனவர்கள் மற்றும் பழங்குடியினருக்காக பிரதமர் மோடி பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். ராஜ்பவனில் நடைபெறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற அரசு நிகழ்ச்சிகளில் மீனவர்கள் கலந்து கொள்ள வேண்டும். எந்நேரமும் மீனவர்கள் உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று கூறினார். மேலும் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் ஆளுநர் ரவி பெற்றுக் கொண்டார்.