ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த 92 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக ஒரு பெண் பதவி வகித்தது இல்லை. முதல்முறையாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் என்ற ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெண் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பது இதுவே முதல் முறை. இவர் 1995-ஆம் ஆண்டு HUL என்ற நிறுவனத்தில் இணைந்து வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு, தனிப்பட்ட பராமரிப்பு, வணிகங்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான பதவி வகித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2023 -ஆம் ஆண்டு யூனிலிவர் நிறுவனத்தில் அழகு மற்றும் நல்வாழ்வு தலைவராக பதவி ஏற்றார். இந்த நிலையில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரோஹித் ஜாவா தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதனால் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி பிரியா நாயர் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார் என யுனிலிவர் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். ஏனெனில்‌ இந்திய சந்தை பற்றி ஆழமான புரிதல் கொண்டுள்ளவராக பிரியா நாயர் செயல்பட்டு வருகிறார். எனவே இவரது இந்த திறமையால் ஹிந்துஸ்தான் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.