பீகார் மாநிலத்தில் பெண் போலீசார்கள் பணி நேரத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதோடு, பணி நேரத்தில் நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில பெண் போலீசார் சீருடையில் இருந்தபடியே மேக்கப், நகைகள் அணிந்து ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவங்கள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் போலீசார் சீருடையை முறையாக அணியாமல், ரீல்ஸ் தயாரித்து வீடியோ எடுத்து, ஆயுதங்களை காட்சிப்படுத்தி, ப்ளூடூத் சாதனங்கள் மூலம் இசை கேட்பது அல்லது தனிப்பட்ட அழைப்புகளில் ஈடுபடுவது போன்றவைகள் கடமைக்கு எதிரான செயல்களாகவும், கடமையில் கவனம் சிதற வைக்கும் செயல்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விதிமீறல்களில் ஈடுபட்ட 10 பெண் போலீசாரும் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள்மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பெண் போலீசர்களுக்கே மட்டும் அல்லாது, ஆண் போலீசார்களுக்கும் பொருந்தும் எனவும், அவர்கள் சீருடையை முறையாக அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சீருடை ஒழுங்கினை மீறும் போலீசார்மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசாரின் பொறுப்புணர்வு மற்றும் பணித்திறனை பாதுகாக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில காவல்துறை தலைமையகம் விளக்கமாக தெரிவித்துள்ளது.