சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம்.
இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்” நிறுவனத்தில் 3 வருடமாக மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தில் அதிகாரிகள் வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர்.
அதில் ரூபாய் 45 கோடி கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.அந்த வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை நவீன் பஞ்சாலால் தான் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்திருந்தார்.
இதனை அடுத்து பால் நிறுவனம் சார்பில் கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மேலாளர் நவீன் பஞ்சாலாலை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால் அவர் நாளை வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் விசாரணைக்கு முந்தைய நாள் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்தை அடுத்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நிறுவனத்தின் பணம் கையாடல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த Chair-ம் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி- காவல்துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது?
அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. காவல்துறை விசாரணைகள் சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் திரு. ஸ்டாலின்?
நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைதிருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா? காவல்துறை நிர்வாகம் செய்யத் தெரியாத பொம்மை முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்திற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?
நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல்துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
