அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக தேனியில் பிரச்சாரம் நடத்தினார். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி தொண்டர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரம்மாண்ட பேனர்கள், முழக்கங்கள், அலங்கரித்த வாகனங்கள் மூலம் அவரது வருகையை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த வரவேற்பை விட அதிகமாக பேசப்படுகிற விஷயம் – எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் பேனர்களில் இடம்பெற்ற தீவிர வரிகள். “நரிகளுக்கு என்ன வந்தது கேடு… உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு!”, “ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்!” போன்ற வாக்கியங்கள், ஓ பன்னீர்செல்வம் அணியை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. “தலைவா, நீங்க மட்டும் போதும்… நாங்க இருக்கோம்!” என்ற வாசகங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியில் கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், “பிரிந்தவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்” என்று கூறி 10 நாட்கள் நேரம் அளித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தும் இந்த பேனர்கள், அந்த கருத்தை நிராகரிக்கும் வகையில் பார்க்கப்படுகின்றன. இதனால், அதிமுகவில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவது இன்னும் சவாலாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்ட சில இடங்களில், “ஒன்றிணைவோம்” என கோஷமிட்ட சிலர் அவரது வாகனத்தை முற்றுகையிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. போடி மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்பட்டது. இதன் மூலம், அதிமுகவில் உள்ளிருக்கும் கருத்து வேறுபாடுகள், வெளிப்படையாக காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.