யுபிஐ பணப்பரிவர்த்தனையில் புதிய புரட்சியாக ‘யுபிஐ லைட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சிறிய அளவிலான தொகையை அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் ரகசிய குறியீட்டு எண்ணான ‘பின்’ நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை.
இது குறிப்பாக, பெட்டிக்கடைகள், பால் பாக்கெட்டுகள் அல்லது சிறிய உணவகங்களில் பணம் செலுத்தும்போது ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க இந்த வசதி பெரிதும் உதவுகிறது. தற்போது ஒருமுறைக்கு 500 ரூபாய் வரையிலும், ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக 4,000 ரூபாய் வரையிலும் பின் நம்பர் இல்லாமலேயே எளிதாகப் பணம் அனுப்ப முடியும்.
இந்த வசதியைப் பயன்படுத்த உங்கள் வங்கியுடன் இணைக்கப்பட்ட கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற செயலிகளில் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதில் உங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை வாலட்டில் ஏற்றி வைத்துக்கொள்ளலாம்.
மேலும் இவ்வாறு செய்வதால் வங்கி ஸ்டேட்மெண்ட்களில் சிறிய தொகையிலான பல பரிவர்த்தனைகள் இடம்பெற்று குழப்பம் விளைவிப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும், இணையச் சேவை குறைவாக இருக்கும் நேரங்களிலும், வங்கி சர்வர் கோளாறுகளால் பரிவர்த்தனை தோல்வியடைவதைக் குறைக்கவும் இந்த யுபிஐ லைட் வழிவகை செய்கிறது.
