தெலுங்கானா மாநிலத்தில் ஒரே மேடையில் இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களைத் தம்பதிகளாக கரம் பிடித்த அபூர்வத் திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா மற்றும் ஆர்த்தி என்ற இரட்டை சகோதரிகள், நிசாந்த் மற்றும் நிதின் என்ற இரட்டை சகோதரர்களை மணந்துகொண்டனர்.
இந்நிலையில் பிறந்தது முதல் அனைத்து விஷயங்களையும் ஒன்றாகவே பகிர்ந்து வளர்ந்த இந்த சகோதரிகள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒரே குடும்பத்திற்குள் நுழைய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வண்ணமயமான இந்தத் திருமண நிகழ்வில் மணமக்களின் உருவ ஒற்றுமையைக் கண்டு உறவினர்களும் நண்பர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட மணமகன்களும் மணமகள்களும் அருகருகே அமர்ந்து சடங்குகளைச் செய்தபோது, யார் யார் என்று அடையாளம் காண்பதற்கே விருந்தினர்கள் சற்று திணறினர். சமூக வலைதளங்களில் இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், “இரட்டிப்பு மகிழ்ச்சி” எனப் பலரும் இந்தத் தம்பதிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
