பிரபலமான சாக்லேட் பிராண்டான பார்லே, இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்புறவைக் கொண்டாடும் விதமாக, தனது புகழ்பெற்ற ‘மெலடி’ சாக்லேட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இணைந்த “#Melodi” மீம் டிரெண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்பு வாய்ந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதன் ஒரு பகுதியாக, நட்பு தினமான நேற்று முன்தினம் இத்தாலியின் புகழ்பெற்ற ‘டிராமிசு’ சுவையைக் கொண்ட லிமிடெட் எடிஷன் மெலடி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனெட்டோ உருவான இந்த சுவையான இனிப்பு வகையை மெலடியுடன் இணைத்துள்ளதன் மூலம், இரு நாடுகளின் நட்பை மிகச் சுவாரஸ்யமாக இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இந்தத் தனித்துவமான சாக்லேட் பிளிங்கிட் ஆன்லைன் தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான ஒரு மீம் டிரெண்டை எந்தளவிற்குச் சரியாகப் பயன்படுத்தி ஒரு பிராண்ட் பிரபலமாக முடியும் என்பதற்கு இந்தச் செயல் சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் இது குறித்த பதிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பார்லே நிறுவனத்தின் இந்தச் சாமர்த்தியமான மார்க்கெட்டிங் யுக்தியைக் கடுமையாகப் பாராட்டி வருவதுடன், இதன் சுவை எப்படி இருக்கும் என்ற ஆவலோடும் விவாதித்து வருகின்றனர்.
