உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், 11 மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மனைவியும், மருமகனும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குஜராத்தில் பணிபுரிந்து வந்த பாதிக்கப்பட்டவர், 6 அல்லது 7 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவிக்கும், மருமகனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனால் கடந்த 2024-ல் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம், கொலைக்கு வழிவகுத்தது.

அதாவது கடந்த 2024 நவம்பர் 2-ம் தேதி இரவு, உயிரிழந்தவர் மது அருந்திய பிறகு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால்   மனைவியும், மருமகனும் இணைந்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த டீ கொடுத்து, மயங்கியதும் உலோகப் பொருளால் தாக்கி கொலை செய்தனர்.

பின்னர், உடலை வீட்டின் பின்புறத்தில் குழியில் புதைத்தனர். பாதிக்கப்பட்டவரின் தாய் தொடர்ந்து புகார் அளித்ததால், ஆகஸ்ட் மாதம் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது. மண் தாழ்ந்து போவதை மறைக்க, குற்றவாளிகள் மீண்டும் மண்ணை நிரப்பியது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் முடிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.