உத்தரபிரதேச மாநிலம் மங்லோரா பகுதியைச் சேர்ந்த ஜெய்வீர் என்பவர், 2011-ம் ஆண்டு பிரிஜ்பால் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயத் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெய்வீரை, ராகுல் (வயது 30) என்ற நபர் திடீரென வழிமறித்தார். பிறகு, தன்வசம் இருந்த துப்பாக்கியால் அவரை நேரில் சுட்டார். அதிரடியாக நடந்த இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே ஜெய்வீர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ராகுல் என்பது ஜெய்வீரால் கொல்லப்பட்ட பிரிஜ்பாலின் மகன் என தெரியவந்தது. தனது தந்தையை கொன்றவரை 14 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத வகையில் சுட்டுக் கொன்று பழி தீர்த்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள ராகுலை பிடிக்க போலீசார் விரிவான வலைவீச்சு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மங்லோரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
