உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் டுமிர் சவ்ரஹா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு சுந்தரம் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை, சுந்தரம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சுற்றித் திரிந்த 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென தாக்கியன. எதிர்பாராத இந்த தாக்குதலில் குழந்தை பயந்து கதறி அழ தொடங்கியது.

அழுகை சத்தம் கேட்டு வீட்டு மக்கள் ஓடிவந்து பார்த்தபோது, அந்த நாய்கள் குழந்தையின் முகம் மற்றும் கைகளில் கடித்து குதறிக் கொண்டிருந்தன.இதையடுத்து அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட ஆழமான காயங்களுக்கு 10 தையல் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குழந்தை டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது என்றும் நிலைமையானது சற்று மேம்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2 வயது குழந்தை தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தெருநாய்கள் மீதான கோபம் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.