இன்றைய காலகட்டக் குழந்தைகளுக்கு செல்போன் மீதிருக்கும் தீவிர மோகமும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் எந்த அளவிற்கு விபரீதமாக மாறிவருகிறது என்பதற்கு ஆதாரமாக, உயரமான இடத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்து சிறுவன் ஒருவன் போன் பார்க்கும் பகீர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி நெட்டிசன்களைப் பதற வைத்துள்ளது.

வீட்டின் மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தபடி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மெல்லிய மூங்கில் கம்பின் மீது, எந்தவொரு பயமும் இல்லாமல் ஒரு சிறுவன் மிக நைஸாக உட்கார்ந்து கொண்டு செல்போன் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சுட்டெரிக்கும் வெயிலைப் பற்றிய கவலையோ, அல்லது அவ்வளவு உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிற பயமோ துளியும் இல்லாமல், சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து அந்தச் சிறுவன் மொபைல் போனில் மூழ்கியிருக்கும் காட்சி பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்கிறது.

ட்விட்டரில் @KUNDAN00PATEL என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த ஆபத்தான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “இன்றைய குழந்தைகளுக்கு செல்போன் என்பது ஒரு பெரிய வியாதியாக மாறிவிட்டது என்றும், இதற்குப் பெற்றோர்களின் அலட்சியமும் ஒரு முக்கியக் காரணம் என்பதால் பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் தங்களது கவலைகளையும், கண்டனங்களையும் கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.