செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை தன் வீட்டுப் பின்புறம் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (20) மற்றும் அஜய் (27) ஆகிய இரு இளைஞர்கள், சிறுமியின் வாயில் துணியைத் திணித்துக் கடத்தியுள்ளனர்.
பின்னர், அவரை அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்குக் கொண்டு சென்று இருவரும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து தேடிச் சென்ற தந்தை, அங்கு சிறுமி பாதிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
