இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் தளம் மூலமாக வீடுகளுக்குச் சென்று தூய்மை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கும் ‘கிக்’ தொழிலாளர்களின் உழைப்பும் வருமானமும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதப் பொருளாக மாறுவது உண்டு.
அந்த வகையில், ‘ஸ்னாபிட்’ என்ற நிறுவனத்தின் மூலம் வீடுகளுக்குச் சென்று பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் ரூ.47,000-க்கும் அதிகமாகச் சம்பாதித்துள்ளதாக வெளியான வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
உடன் வேலை செய்யும் மற்றொரு பெண்மணி, அவரது மொபைலில் உள்ள ஸ்னாபிட் செயலியின் வருமான டேஷ்போர்டை வெளிப்படையாகக் காண்பிக்குமாறு கேட்க, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
அந்த வீடியோவில், பயிற்சி மற்றும் சீருடைக்கான கட்டணக் கழிவுகளுக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்குக் கிடைத்த நிகரச் சம்பளம் ரூ.46,641 எனக் காட்டப்படுகிறது. இதில் சேர்ப்பு போனஸ் மற்றும் ‘சக்தி போனஸ்’ போன்ற கூடுதல் ஊக்கத்தொகைகளும் அடங்கும்.
அதுமட்டுமன்றி, அந்த மாதத்தில் அவர் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்திருந்த போதிலும் இந்த அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளார் என்ற தகவல் வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டதுதான் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது.
இதைப் பார்த்த பல பொறியியல் பட்டதாரிகளும், கார்ப்பரேட் ஊழியர்களும் “நாங்கள் தவறான வேலைக்கு வந்துவிட்டோமோ, இந்த வேலைக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?” என்று நகைச்சுவையாகக் கேள்விகளை எழுப்பித் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதேவேளையில், ஒருசாரார் இந்த வருமானத்தைக் கண்டு “நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த தகுந்த ஊதியம்” என்று பாராட்டி வரும் நிலையில், மற்றொரு சாரார் இந்தத் தொகையின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர்.
நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வில்லாமல் உழைத்தாலும், அனைத்து போனஸ்களையும் சேர்த்தாலும் கூட இவ்வளவு பெரிய தொகையை எட்டுவது கடினம் என்றும், இது அனைத்து ஊழியர்களுக்கும் சாத்தியமாகாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
எது எப்படியோ, பாரம்பரிய வேலைகளை விட சுயசார்புடன் உழைத்துச் சம்பாதிக்கும் ஹோம் சர்வீஸ் தொழிலாளர்களின் வருமானம் பற்றிய இந்த வைரல் பதிவு, இந்தியாவில் ‘கிக் எகனாமி’ தொழிலாளர்களின் நிலை குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
See this Instagram video by @kamala01019 https://t.co/Gz6qiUXZdb
“>
