உத்தரப் பிரதேசம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி குமாரி (21) கடந்த ஏப்ரல் மாதத்தில் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, அண்மையில் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், சச்சினும் அவரது குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணையை கேட்டு அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
வரதட்சணை தர மறுத்ததற்காக, கடந்த வெள்ளிக்கிழமை சச்சினும் அவரது உறவினரும் ரஜினியை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் காரணமாக ரஜினி உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட பின்னர், ஆதாரங்களை அழிக்கவேண்டும் என்பதற்காக, அவரது உடலை வயலுக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இந்த அரக்கத்தனமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ரஜினியின் தாயார் சுனிதா தேவி, மைன்புரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ரஜினியின் கணவர் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு, சஹ்பாக் மற்றும் உறவினர்கள் ராம்நாத், திவ்யா, டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
