தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்ததில் ஒரு மாணவனும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் விஷப்பூச்சி கடித்ததில் மூன்றாம் வகுப்பு மாணவியும் உயிரிழந்த சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை உட்கட்டமைப்போ அல்லது முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் உயிர் இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்களைக் கொண்டு தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்ய வைத்த நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், மாணவர்களை இது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது பெரும் குற்றம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்று விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு, பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
