பீகார் மாநில சட்டப்பேரவையில், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரின் பதிலால் அதிருப்தியடைந்த பாஜக எம்.எல்.ஏ-வும், பிரபல நாட்டுப்புறப் பாடகியுமான மைதிலி தாகூர், அமைச்சரை நேரடியாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வான மைதிலி தாகூர், இன்று (பிப். 10) சட்டப்பேரவையில் தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டே, “மருத்துவமனைக் கட்டிடம் மோசமான நிலையில் இல்லை; சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் மட்டுமே தேவைப்படுகின்றன” என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த மைதிலி தாகூர் சட்டப்பேரவையில் பேசுகையில், ‘அமைச்சரின் பதிலில் எனக்குத் துளியும் திருப்தி இல்லை. நானே நேரில் சென்று பார்த்தபோது அந்தக் கட்டிடம் மிகவும் இடிந்து விழும் நிலையில் இருப்பதை உறுதி செய்தேன். தற்போது ஒரு சிறிய அறையில் தான் மொத்த சுகாதார அமைப்பும் இயங்கி வருகிறது. அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. முன்பு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், அவர்களும் இப்போது இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் சிறு வயதிலிருந்தே சுகாதார அமைச்சரை கவனித்து வருகிறேன். அவர் நீண்ட காலமாக இந்தத் துறையில் இருக்கிறார். சுமார் 5 முதல் 7 ஊராட்சிகளைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளனர். அலிநகர் மற்றும் கன்ஷ்யாம்பூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் மையமாக விளங்கும் இந்த மருத்துவமனையை மக்களின் நலனுக்காகச் சீரமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
சொந்தக் கட்சி அமைச்சரின் பதிலைப் பகிரங்கமாக மறுத்து, சட்டப்பேரவையிலேயே மைதிலி தாகூர் துணிச்சலாகக் கேள்வி எழுப்பியது பாஜக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சமூக வலைதளங்களில் கட்சிப் பாகுபாடின்றி பலரும் மைதிலி தாகூரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
