சமூக ஊடகங்களில் பாலோவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சிறுமி ஒருவர் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் சிறுமிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காணொலி பற்றி தெரிந்திருந்தும் மறைத்த காரணத்துக்காக அவரது பெற்றோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்பில் உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி, சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்தக் காணொலியை அந்தச் சிறுமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் இந்து தெய்வங்களைப் பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் காணொலி விரைவில் வைரலாகப் பரவவே, பல பயனர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இந்து அமைப்புகள் சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி, காவல் துறையில் புகார் அளித்தன.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அச்சிறுமியை காப்பகத்தில் அடைத்ததோடு, காணொலி பற்றித் தெரிந்தும் அதை மறைத்த காரணத்துக்காக அவரது பெற்றோரையும் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள மற்றொரு நபர் தலைமறைவாக உள்ளார். அவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
“இந்து கடவுள்கள் குறித்துச் சிறுமி அவதூறு பேசியுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் சில நபர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. சமூக ஊடகங்களில் பார்வையாளர்களையும் பாலோவர்களையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சிறுமி இந்த ரீலை உருவாக்கியுள்ளார். அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காணொலியை பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மீறிப் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, தவறை ஒப்புக்கொண்டு, இனி இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்றும், பொதுமக்கள் யாரும் காணொலியைப் பகிர வேண்டாம் என்றும் அச்சிறுமி காவல் துறையிடம் மன்னிப்பு கோரும் காணொலியும் வெளியாகி உள்ளது.
