உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமை, கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் ஆபாச விடியோ மூலம் மிரட்டல் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் புகார்களை அளித்துள்ளார். கோரக்பூர் கோரக்நாத் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண், நீதிக் கேட்டு கண்ணீருடன் காவல் நிலையத்திற்குச் சென்றார். “ஐயா, எனது கணவர் எனக்குத் தெரியாமல் என் ஆபாச விடியோவைப் பதிவு செய்தார். அதை நீக்குமாறு கேட்டபோது, அவர் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார்,” என்று கூறிப் புகாரளித்தார்.
மேலும், சீதாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தனது கணவர், அங்கிருக்கும் ஒரு சக பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், என்னை வீட்டிலிருந்து வெளியேற்றத் துன்புறுத்தி வருகிறார்,” என்றும் கூறினார். இது தொடர்பாக, ஒரு நாள் இரவு உணவில் போதை மருந்தைச் சேர்த்து, நான் மயக்கமடைந்த நிலையில் என் ஆபாச விடியோவை அவர் பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர், கோரிய தொகையைக் கொடுக்காவிட்டால், அந்த விடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, திருமணமான நாள் முதல் எனது கணவர் மற்றும் மாமனார்-மாமியார் ஆகியோர் தொடர்ந்து வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்தியதாகவும், 2016-ல் ஒரு பஞ்சாயத்து ஒப்பந்தம் செய்த பிறகும் தொல்லைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
