ஐபிஎல் 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன், தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சச்சின் டெண்டுல்கரின் பெயரை ஒப்பிட்டுத் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஜூன் 26 அன்று தொடங்கவுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் அறிமுக வீரராகக் களம் காண்பாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ், “வைபவிடம் அசாதாரண கிரிக்கெட் திறமை இருப்பது உண்மைதான்

என்றாலும், அவருக்கு இப்போது 15 வயதுதான் ஆகிறது, எனவே அவரைப் பக்குவப்படுத்த அவசரம் காட்டத் தேவையில்லை; 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரைப் போல இவரால் நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்,

அவருக்கு 20-22 வயது ஆகும்போதுதான் முழுமையாக மதிப்பிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இளம் வீரரான வைபவ் எந்தவித எதிர்பார்ப்புச் சுமைகளுமின்றி சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஆதரவு தெரிவித்துள்ளார்.