குத்துச்சண்டை உலகின் பிரகாசமான நட்சத்திரமாகக் கருதப்பட்ட முன்னாள் போர்ட்டோ ரிக்கோ குத்துச்சண்டை வீரர் பிரிச்சர்ட் கோலன், தனது 33-வது வயதில் காலமானார். டெரல் வில்லியம்ஸ் என்பவருடனான மோதலின் போது ஏற்பட்ட கொடூரமான மூளைக் காயத்தால் சுமார் 11 ஆண்டுகளாகப் போராடி வந்த அவர் தற்போது உலகை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது மறைவுச் செய்தியை அவரது தந்தையான ரிச்சர்ட் கோலன் கடந்த ஆகஸ்ட் 13, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தத் துயரச் செய்தி குத்துச்சண்டை உலகைத் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு குத்துசண்டை போட்டியின் போது டெரல் வில்லியம்ஸை எதிர்கொண்டபோது பிரிச்சர்ட் கோலனுக்கு வயது வெறும் 23 மட்டுமே. அந்தப் போட்டியின் போது அவரது தலையின் பின்புறத்தில் தொடர்ச்சியாகப் பலமான குத்துகள் விழுந்தன. போட்டியின் முடிவில் தனது அறைக்குத் திரும்பிய அவர் திடீரென மயங்கிச் சரிந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சப்டூரல் ஹெமடோமா (Subdural hematoma) எனப்படும் தீவிர மூளை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த விபத்து அவரை 221 நாட்கள் கோமா நிலைக்குத் தள்ளியதுடன், வாழ்நாள் முழுவதும் தொடரும் கடுமையான நரம்பியல் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.
இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பு, கோலன் குத்துச்சண்டை உலகின் மிகப்பிரகாசமான இளம் திறமையாளராகக் கருதப்பட்டார். எந்தவொரு தோல்வியும் சந்திக்காமல் 16 வெற்றிகளுடன் (அதில் 13 நாக் அவுட் வெற்றிகள்) வில்லியம்ஸை எதிர்கொள்ள அவர் களமிறங்கியிருந்தார். ஆனால், அவரது அபாரமான எதிர்காலம் ஒரே இரவில் பறிபோனது. குத்துச்சண்டை வரலாற்றில் வீரர்களின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் மிகவும் சோகமான ஒரு நிகழ்வாக இவரது சோகம் மாறியது.
அவரது மறைவைத் தொடர்ந்து, குத்துச்சண்டை உலகின் முக்கிய அமைப்புகளும் பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உலக குத்துச்சண்டை அமைப்பு கோலனின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியை நினைவுகூர்ந்தது. அதேபோல், உலக குத்துச்சண்டை கவுன்சிலும்அவரை ஒரு உண்மையான போராளி என்றும், உலகெங்கிலும் உள்ள மக்களை தனது வலிமையால் ஊக்கப்படுத்தியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.
Murió el exboxeador puertorriqueño Prichard Colón.
De 33 años y originario de Orocovis, falleció este jueves 13 de agosto tras más de una década lidiando con las graves secuelas de una lesión cerebral irreversible.
El lamentable hecho sucedió el 17/10/15 en el EagleBank Arena… pic.twitter.com/cl2OIPKWsg
— Anxious Vids🔥 (@Anxiousvids) August 13, 2026
கோலனின் இந்தத் துயரக் கதை அவரது சாதனைகளைத் தாண்டி குத்துச்சண்டை உலகில் ஒரு நீங்காத் தழும்பை விட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக, தலையில் தாக்கப்படும் ஆபத்தான குத்துகள் மற்றும் ‘ராபிட் பஞ்ச்’ எனப்படும் விதிகளுக்குப் புறம்பான குத்துகள் குறித்து தீவிர விவாதங்களையும் மாற்றங்களையும் இவரது வழக்கு உருவாக்கியது. உலகெங்கிலும் இருந்து கண்ணீர் அஞ்சலிகள் குவிந்து வரும் நிலையில், பிரிச்சர்ட் கோலன் தான் இழந்த புகழுக்காக மட்டுமல்லாமல், தனது நீண்ட போராட்டக் காலத்தில் அவர் காட்டிய அசாத்தியமான தைரியத்திற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார்.
