கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்திறமையால் மட்டுமல்லாமல் தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைல் மூலம் இன்டர்நெட்டை தெறிக்கவிட்டுள்ளார். சவுதி ப்ரோ லீக் புதிய சீனுக்காக அல்-நஸ்ர் அணிக்கு திரும்பியுள்ள ரொனால்டோ, தனது வழக்கமான அடர் பழுப்பு நிற முடியை மாற்றிவிட்டு, காப்பர்-மஞ்சள் நிற புதிய ஹேர் ஸ்டைலுடன் களமிறங்கியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் இந்த மிரட்டலான மேக்ஓவரை அவர் வெளிப்படுத்தினார். கருப்பு நிற டி-சர்ட், நெக்லஸ் மற்றும் கைக்கடிகாரத்துடன் போஸ் கொடுத்திருந்த அவரது ஜெல் செய்யப்பட்ட கோல்டன்-காப்பர் தலைமுடி, அவரது அடர் நிற புருவங்களுடன் சேர்த்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொடுத்தது. 41 வயதான ரொனால்டோவின் இந்த வித்தியாசமான தோற்றம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்ததுடன், சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது.
ரொனால்டோவின் இந்த திடீர் தலைமுடி மாற்றத்தை நெட்டிசன்கள் சும்மா விடவில்லை. உடனடியாக இதனை ஒரு மீம்ஸ் திருவிழாவாக மாற்றிவிட்டனர். சில ரசிகர்கள் இவரது புதிய தோற்றத்தைப் பாராட்டியபோதிலும், பெரும்பான்மையானவர்கள் அவரை ராப் பாடகர் எமினெம் மற்றும் பல்வேறு வீடியோ கேம் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு ரசிகர் அவரை “எமினெம் 2.0” என்று செல்லமாக அழைக்க, மற்றொருவரோ “ஜோர்கினா ரோட்ரிக்ஸ் இந்த லுக்கை நிச்சயம் அப்ரூவ் செய்ய மாட்டார்” என்று கிண்டலடித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் ஜோர்கினா ரோட்ரிக்ஸுடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு ரொனால்டோ ஒரு “புதிய சகாப்தத்தில்” நுழைந்துவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக அந்த காப்பர்-மஞ்சள் நிறத்தை மையமாக வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களைச் சூடாக்கி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த புதிய ஹேர் ஸ்டைல் மாற்றத்துடன் ரொனால்டோ 2026-27 சீசனுக்கான அல்-நஸ்ர் அணியில் பெரும் இலக்குகளுடன் இணைந்துள்ளார். தனது வாழ்நாளில் 1,000 கோல்கள் அடிக்கும் லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறி வரும் இந்த போர்ச்சுகீசிய வீரர், இந்த புதிய சீசனில் அல்-நஸ்ர் அணிக்கு முக்கிய கோப்பைகளையும் வென்று கொடுக்க தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
