கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் அதே பதற்றம், இப்போது வங்கதேச அணியுடனும் வெடித்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று புலவாயோவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் டாஸ் போடப்பட்டபோது, இரு அணி கேப்டன்களும் கைகுலுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகப் போட்டிக்கு முன்பாக இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், டாஸ் வென்ற வங்கதேசத்தின் தற்காலிக கேப்டன் ஜவாத் அப்ரார் மற்றும் இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் ஒருவரையொருவர் கண்டுகொள்ளவே இல்லை.

இதற்குப் பின்னால் பெரிய அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்குப் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே, இந்திய அணி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கும் இந்தியா இதே போன்ற ‘கைகுலுக்காத’ தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.