ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்திற்கும், சமூக வலைதள கேலிகளுக்கும் உள்ளாகி வருகிறது.
ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரர்களாகவும், அதிரடி மன்னர்களாகவும் திகழ்ந்த பாபர் அசாமும், ரிஸ்வானும் சமீபகாலமாக ஃபார்ம் அவுட் ஆகி திணறி வருகின்றனர். 110-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்கள் விளையாடி வருவதால், பாகிஸ்தான் தேசிய அணியில் இருந்தே ஓரம் கட்டப்பட்டனர். தற்போது ஆஸ்திரேலிய லீக் தொடரிலும் அதே நிலை நீடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் முகமது ரிஸ்வான், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆமை வேகத்தில் விளையாடினார். பொறுமையிழந்த அந்த அணியின் கேப்டன், பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்று ரிஸ்வானை ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆகி வெளியே வருமாறு அழைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் மந்தமாக விளையாடியதற்காக ஒரு வீரர் இவ்வாறு வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
அதேபோல் பாபர் அசாம் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்துத் தடுமாறினார். ஓவரின் கடைசி பந்தில் அவர் ஒரு ரன் (Single) எடுக்க முயன்றபோது, மறுமுனையில் இருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித், “வேண்டாம்.. வேண்டாம்.. அடுத்த ஓவரை நானே பார்த்துக்கொள்கிறேன்” என சைகை காட்டி தடுத்தார். இது பாபர் அசாமுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இருவரின் சொதப்பல் ஆட்டம் அந்தந்த அணிகளுக்குப் பின்னடைவாக இருந்தாலும், பிபிஎல் தொடருக்கு இது ஒரு மிகப்பெரிய விளம்பரமாக மாறியுள்ளது. இவர்களின் ‘காமெடி’ ரன் அவுட்கள் மற்றும் ஸ்லோ பேட்டிங் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருவதால், தொடரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இவர்களின் ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் போட்டிக்குக் கூட தகுதியற்றது” என ரசிகர்கள் இணையத்தில் கடுமையாகச் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தொடர்ச்சியான சொதப்பல்களால், இனிவரும் போட்டிகளில் இவர்களுக்கு ‘பிளேயிங் லெவன்’ அணியில் இடம் கிடைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இரு அணிகளிலும் மாற்று வீரர்கள் தயாராக இருப்பதால், பாபர் மற்றும் ரிஸ்வான் பெஞ்சில் அமரவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது
.
