ஐபிஎல் 2026 தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 776 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ள இந்திய இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைப் பார்த்து வியந்துள்ள தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின், வைபவ் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என்று நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்காவில் 14 அல்லது 15 வயதில் இவரைப் போன்ற ஒரு அதிசயமான மற்றும் திறமையான வீரர் யாருமே இல்லை என்று பாராட்டிய ஸ்டெயின், வைபவ் தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய ஜாம்பவான்களை விடவும் மிகப்பெரிய உயரத்தை எட்ட வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார்.
எனினும், இந்த இளம் வயதிலேயே இவரை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளாவிட்டால் அவரது அரிய திறமை வீணாகிவிடும் என்று பிசிசிஐ (BCCI) மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், ககிசோ ரபாடா எப்படித் தனது பந்துவீச்சால் அதிரடி தாக்குதல் நடத்துகிறாரோ, அதுபோல வைபவ்வை அதிவேகமான பவுன்ஸ் பந்துகள் மூலம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும், அவர் இன்னும் சிறுவன் என்பதால் பவுன்சர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது மிகவும் முக்கியம் என்றும் அட்வைஸ் செய்துள்ளார்.
மேலும், உலக அளவில் பண பலத்திலும் வீரர்களின் தரத்திலும் ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டத்திற்கு எந்தவொரு தொடரும் நிகராக முடியாது என்றும், தங்களது SA20 தொடர் வேகமாக வளர்ந்து வந்தாலும் அது 2-வது இடத்திற்காகத்தான் போட்டியிடுகிறது என்றும் ஓப்பனாகப் பேசிய ஸ்டெயின், அடுத்த ஆண்டு (2027) தங்கள் நாட்டில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உலகிற்குத் தங்களை மீண்டும் நிரூபிக்கக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
