அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று களம் இறங்க உள்ள நிலையில், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாடும் Playing 11 அணியில்  வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்று இந்திய அணியின் பேட்டிங் கோச் சீதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய தலைமையில் இந்திய டி20 அணி தனது பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில், முதன்முறையாக சீனியர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வைபவ், தனது சர்வதேச அறிமுகப் போட்டிக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரை உட்கார வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த முடிவு பயிற்சியாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேட்டிங் கோச் சீதான்ஷு கோடக், வைபவ் சூர்யவன்ஷி அசத்தலான திறமைசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், ஐபிஎல் தொடரில் ஜோப்ரா ஆர்சர் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்ட விதம் அவரது இயல்பான ஆட்டத்திறனை காட்டுவதாகவும் பாராட்டினார். எனினும், அணியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக, ஏற்கனவே ரன் குவித்து ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வீரர்களைத் தேர்வு செய்வது தேர்வுக்குழுவிற்குப் பெரும் தலைவலியாக இருந்தாலும், தற்போதைக்கு சிறப்பாகச் செயல்பட்டு வரும் சீனியர் வீரர்களைப் புறக்கணிக்க முடியாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.