சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ராம் கார்டன் பகுதியில் இன்ஜினியரான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலம் நோம்பல் நகரில் இருக்கிறது. இந்நிலையில் ஊருக்கு வந்த ஐயப்பன் விற்பனை செய்வதற்காக அந்த இடத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் வேறு ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருப்பதை கண்டு ஐயப்பன் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் விசாரணையில் ஐயப்பன் மனைவியின் அண்ணனும், ரியல் எஸ்டேட் தரகரமான பிரபு ஆள் மாறாட்டம் செய்து 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது பிரபு சரியாக பதில் கூறவில்லை. இதுகுறித்து ஐயப்பன் ஆவடியில் இருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.