கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குளம் அருகேயுள்ள அடுப்புட்டி பகுதியில், காவல்துறையினர் “ஆபரேஷன் தூஃபான்” (Operation Toofan) என்னும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 40 வயதான பினீஷ் என்பவரது வீட்டுக் கதவை காவல்துறையினர் தட்டியுள்ளனர். வாசலில் காவலர்கள் நிற்பதைக் கண்டதும் பினீஷிற்கு பயத்தில் கை, கால்கள் நடுங்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை எங்கு மறைப்பது என்று தெரியாமல், பதற்றத்தில் அங்கு அடுப்பில் சாதம் வெந்துகொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் தூக்கிப் போட்டு மூடியுள்ளார்.

​ஆனால், குக்கர் “விசில்” அடிக்கத் தொடங்கியதும், சாதத்தின் வாசனையோடு சேர்ந்து கஞ்சா வாசனையும் சமையலறை முழுவதும் பரவத் தொடங்கியது. அந்த வாசனையை வைத்தே காவல்துறையினர் நேரடியாக சமையலறைக்குள் சென்று சோதனையிட்டனர். குக்கரைத் திறந்து பார்த்தபோது, கொதிக்கும் சாதத்திற்கு நடுவே கஞ்சா பாக்கெட் வெந்துகொண்டிருப்பது கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து, பினீஷை காவல்துறையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர். இந்த ‘எபிக் ஃபெயில்’ நகைச்சுவைச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.