மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நெஞ்சை உலுக்கும் மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு முன்னணி உணவகத்திற்கு தனது தோழர்களுடன் சென்ற மைனர் பெண் ஒருவருக்கு, அந்த ஹோட்டலிலேயே பணிபுரியும் இரண்டு வெயிட்டர்கள் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.
மேலும் அந்த நச்சுப் பானத்தைக் குடித்ததும் நிலைதடுமாறி மயங்கிய சிறுமியை, அந்த காம மிருகங்கள் இருவரும் தனி இடத்திற்கு இழுத்துச் சென்று மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களிடையே கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய காவல்துறையினர், அந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்த இரண்டு ஊழியர்களையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ உள்ளிட்ட மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த காமக் கொடூரர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. “பொதுமக்கள் குடும்பத்தோடு செல்லும் உணவகங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எங்கே தான் செல்வது?” என சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது தீவிர மருத்துவ சிகிச்சைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூரப் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
