தீவிர வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. கடுமையான தாகத்துடன் பொது இடத்திலுள்ள ஒரு தண்ணீர்க் குழாயின் அருகே வரும் அந்தக் குரங்கு, மிகவும் லாவகமாக குழாயைத் திறந்து தண்ணீர் குடிக்கிறது.

மேலும் தாகம் தீர்ந்தவுடன் அங்கிருந்து உடனே ஓடிவிடாமல், ஒரு நொடி நின்று தனது கைகளால் அந்தத் தண்ணீர்க் குழாயை மிகச் சரியாக மூடிவிட்டுச் செல்கிறது. வாய் பேச முடியாத ஒரு விலங்கு காட்டிய இந்த அதீத புத்திசாலித்தனமும், பொறுப்புணர்ச்சியும் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“>

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை உத்தராகண்ட் காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதனுடன், “தண்ணீரைச் சேமிப்போம், எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!” என்ற மிக முக்கியமான விழிப்புணர்வுச் செய்தியையும் அவர்கள் மக்களுக்காகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மனிதர்களே பல நேரங்களில் பொது இடங்களில் தண்ணீரை வீணடித்துச் செல்லும் நிலையில், ஒரு விலங்கு தண்ணீரின் ஒவ்வொரு துளியின் மதிப்பை உணர்ந்து செயல்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஒரு சிறந்த பாடமாகும். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பாடம் இது” என்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.