சென்னை கடற்கரை (பீச்) காவல் நிலையத்தில் தன் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ, தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தனக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தவெக அரசுக்கு எதிராகப் போராடியதற்காகத் தன் மீது புதிய வழக்குப்பதிவு செய்திருப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று தமிழக வெற்றிக் கழக அரசை ஜூலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றும் தான் மெரினா கடற்கரையில் பதாகை (போர்டு) பிடித்து நின்றதற்காக அன்று எச்சரித்து அனுப்பிவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்ற விடுமுறை நாட்களைக் கணக்குக் கூட்டி தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அலிஷா அப்துல்லா புகார் அளித்த அடுத்த நாட்களிலேயே திருச்சி சூர்யா, முக்தார் போன்றோர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை தன் மீதே பாய்வதாகவும், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜககாரன் கூட இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள மாட்டான்; தவெக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது, தவெக ஆதரவாக இருக்கும் பெண்கள் யாராவது புகாரளிக்கப் போனால் உஷாராக இருங்கள், உங்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றும் ஜூலி அந்த வீடியோவில் மிக ஆவேசமாகப் பேசியுள்ளார்.
