உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறையில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் நியமனத்திற்கான காரணங்களை பொதுமக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது, திறமையான நீதிபதிகளின் பங்களிப்பை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு முரணான கருத்துகளை வெளிப்படுத்தும் நபர்களும் நீதித்துறைக்குள் நுழைய வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொலீஜியம் பரிந்துரைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் என்றார். நீதிபதிகள் நியமனம் போன்ற முக்கியமான முடிவுகள் குறித்து தகவல் அடிப்படையிலான பொதுவிவாதம் நடைபெறுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மைக்காலமாக உச்சநீதிமன்ற கொலீஜியம் வெளியிடும் அறிக்கைகளில், நீதிபதிகளை உயர்த்திப் பதவி வழங்குவதற்கான காரணங்கள் குறிப்பிடப்படாமல் இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னர் ஒவ்வொரு பரிந்துரைக்கும் காரணங்கள் இணைக்கப்பட்ட நிலையில், சமீபத்திய அறிக்கைகளில் அந்த நடைமுறை காணப்படவில்லை என்று கூறிய அவர், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான முடிவுகள் இன்னும் முழுமையான ரகசிய நடைமுறையிலேயே இருப்பதாகவும் விமர்சித்தார்.

இதனால் மக்களை எறும்புகள் என்று குறிப்பிடும் பொறுப்பாற்று நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய இது வழி வகுப்பதோடு அவர்களே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளையும் தெரிவிப்பார்கள் என்றார். கடந்த 2024 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்தை மனதில் வைத்தே நீதிபதி இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

இந்திய நீதித்துறையில் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய ஒன்றாக கொலீஜியம் முறை இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இணைந்து உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரைக்கும் இந்த முறையில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாக பல தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க இந்த முறை அவசியம் என்று நீதித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2015-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்ஜேஏசி) சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததிலிருந்து, கொலீஜியம் முறை குறித்த விவாதம் தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கிய இடம் பெற்று வருகிறது.