மராட்டிய மாநிலத்தின் ஜல்கான் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, பல இடங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அஞ்சனி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், ஆற்றங்கரையில் இருந்த சுரேஷ் பில் என்ற நபர், கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளநீரில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தை எதிர்கொண்டார்.

நீரின் வேகம் நொடிக்கு நொடி அதிகரித்ததை உணர்ந்த சுரேஷ், பதற்றமடையாமல் சமயோசிதமாக செயல்பட்டார். ஆற்றின் நடுவே இருந்த பெரிய மரம் ஒன்றின் மீது வேகமாக ஏறி அமர்ந்த அவர், பல மணி நேரம் அங்கேயே உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருந்தார். சுற்றிலும் சீறிப்பாய்ந்த வெள்ளநீருக்கு நடுவே அவர் மரத்தின் மீது அமர்ந்திருந்த காட்சி அப்பகுதி மக்களை பதற வைத்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருப்பினும், வெள்ளநீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அவரை அடைய முடியவில்லை. தொடர்ந்து பல மணி நேரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் முடிவில், சுரேஷ் பில் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், ஆற்றங்கரை பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை கடக்க முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.