ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிரண் (35) என்ற இளம்பெண், தனது 4 பிள்ளைகளான சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகியோருடன்  உயிரிழந்தது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கிரண் சில மாதங்களுக்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து, பிள்ளைகளுடன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர்கள் வீட்டை பூட்டியே வைத்திருந்ததோடு, உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கிரண் மற்றும் 4 பிள்ளைகளின் சடலங்கள் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த பரிதாபகரமான சம்பவம், நிதி நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டது என கூறப்படுகிறது. தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்த கிரணுக்கு வேலை வாய்ப்பு இல்லை, வருமான ஆதாரம் கிடையாது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும் பொருளாதார சிக்கலால் மன அழுத்தத்தில் இருந்த கிரண், முடிவில் இந்த தவறான முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.