மத்தியப்பிரதேச மாநிலம் டிகம்கடில் இதயம் பதறும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமணம் ஆகாத இளம்பெண் ஒருவர், தன் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம், அந்த பகுதியை கலங்கடித்துள்ளது. டிகம்கர் மாவட்ட மருத்துவமனை அருகே உள்ள புதர்களில், கடந்த செவ்வாய் கிழமை மாலை ஒரு குழந்தை கதறி அழுவதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது, குழந்தை காயங்களுடன் கிடந்தது.

 

உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் வாயில் கல் மற்றும் ஃபெவிக்விக் ஊர்ந்த நிலையில் இருந்ததுடன், இது திட்டமிட்ட கொலை முயற்சி எனத் தெரியவந்தது. தகவல் அறிந்த உடனே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர்.

அந்தக் காட்சியில், இரண்டு பைக்குகளில் வந்த பெண் மற்றும் மூன்று இளைஞர்கள் குழந்தையை விட்டுவிட்டு தப்பிச் சென்றது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் டிகம்கர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கலெக்டரேட் சாலையில் உள்ள ஜீவன் மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கிடமான நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், சத்தர் பூர் மாவட்டம், குவாரா தாலுகாவின் பட்வா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டிகம்கர் ஏ.எஸ்.பி விக்ரம் சிங் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்கள் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு பெண். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தையை வீசிய பெண் திருமணம் ஆகாதவராக இருக்கிறார். மேலும், அவர் சிறுமியா, பெரியவரா என்பதை உறுதிப்படுத்த ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணை முடிந்ததும் பெயருடன் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். தற்போது குழந்தை பாதுகாப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.