மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின்போது தனது பெயர் நீக்கப்பட்டதால் மனமுடைந்த 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி என்ற அந்த முதியவர், 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டது குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதுமை மற்றும் வாகன வசதி இல்லாத காரணத்தால் விசாரணைக்குச் செல்ல முடியாமல் தவித்த அவர், தனது குடியுரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகளால் ஏழை மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாவதாகவும், இது போன்ற காரணங்களால் இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தின் எதிரொலியாக, தேர்தல் ஆணையம் தற்போது புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை இனி நேரடி விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய துயரங்கள் இனி நிகழாமல் தடுக்க முறையான கண்காணிப்பு அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.